ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       



95

ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து
மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ
சாலிக் குண்டோ தவறென வுரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப


92
உரை
99

       ஆ புத்திரன் பின்பு அமர் நகை செய்து - ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் விருப்பத்துடன் சிரித்து, மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ - பெரிய மறைநூலுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைக் கேளும், முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் - பழமறை முதல்வனாகிய பிரமனுக்குத் தெய்வக் கணிகையாகிய திலோத்தமை யினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ, அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் - அரிய மறை முதல்வர்களாகிய முனிவர் இருவரும், புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ-முப்புரி நூலணிந்த மார்பினை யுடையீர் இது பொய் மொழியோ, சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து - இங்ஙனமிருப்பச் சாலிக்குக் குற்றம் உண்டோ என்று கூறி, நான் மறை மாக்களை நகுவனன் நிற்ப - நான்மறை யந்தணரை எள்ளிச் சிரித்து நிற்க ;

      அமர் நகை-பொருந்திய நகையுமாம். கேண்மோ : கேளும் என்னும் ஏவற்பன்மை உகரங்கெட்டு ஓகாரம் பெற்று வந்தது. அந்தணர் இருவர் - வசிட்டனும் அகத்தியனும் ; பிரமன் திலோத்தமையைக் கண்ட பொழுதில் வசிட்டனும் அகத்தியனும் கலசத்திற் றோன்றின ரென்பர். அந்தண ரிருவரும் காதலஞ் சிறுவர் என்க.