ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       
100




105
ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே
தாதை பூதியுந் தன்மனை கடிதர
ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும்
கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான்சென் றெய்திச்
சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்
தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத்


100
உரை
108

       ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மறையோதும் அந்தணர்கட்கு இவன் ஒவ்வாதவன் என்று, தாதை பூதியும் தன் மனை கடிதர - தந்தையாகிய பூதியும் தன் இல்லத்தினின்றும் நீக்க, ஆ கவர் கள்வன் என்று-பசுவைக் கவர்ந்த திருடன் என்று, அந்தணர் உறை தரும் - மறையவர்கள் வாழ்கின்ற, கிராமம் எங்கணும் - ஊர்களிலெல்லாம், கடிஞையில் கல்லிட - இவனது பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட, மிக்க சொல்வத்து விளங்கி யோர் வாழும் - பெருஞ் செல்வத்தான் விளக்கமுற்றோர் வாழ்கின்ற, தக்கண மதுரை தான் சென்று எய்தி - தெற்கின்கண் உள்ள மதுரையைத் தான் சென்று அடைந்து, சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில்-சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள, அம்பலப் பீடிகை தங்கினன் வதிந்து!- அம்பலமாகிய பீடிகையிலே தங்கியிருந்து ;

      அந்தணர்க்கு-அந்தணருடன் கூடி யிருத்தற்கு. கடிஞை-பிச்சை யேற்கும் கலம். உலகிலே கடிஞையிற் கல்லிடுவார் எஞ்ஞான்றும் இலரென்பர் ; அங்ஙனமாகவும் இவர்கள் இட்டனரென இரங்கியவாறு. யாரும் கடிஞையிற் கல்லிடாரென்பதனை, 1''நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி, மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த, குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட, கடிஞையிற் கல்லிடுவா ரில்'' என்னும் பழமொழி வெண்பாவானறிக. சிந்தாதேவி - கலைமகள்; அவளுறையுங் கோயிலாகலின் அது கலை நியமம் எனப்பட்டது ; நியமம் - கோயில். அந்தில் : அசை. பீடிகையையுடைய அம்பலத்தி லென்றுமாம்.

       

1 பழ. 246