ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       



30

அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்
குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்
கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்றாங்
கஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு
நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக்


27
உரை
34

       அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்- அவன் அவ்வூரில் ஒரு மறையவன் வீட்டினுட்சென்றவன், ஆங்குப் புலை சூழ் வேள்வியில்-அவ்விடத்தில் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச் சாலையில், குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி-தொடுக்கப்பட்ட நிறமமைந்த மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டு, வெரூஉப் பகை அஞ்சி வெய் துயிர்த்துப் புலம்பி - அச்சத்தைத் தருகின்ற பகைக்கு அஞ்சி வெவ்விதாக மூச்செறிந்து வருத்தமுற்று, கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - கொலைத் தொழில் புரியும் வேடருடைய வில்லிற்குப் பயந்து, வலையிடைப்பட்ட மானே போன்று - வலையின்கண் அகப்பட்ட மானைப்போல, ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு - ஆண்டு அச்சத்துடன் நின்று கூப்பிடும் பசுவின் துன்பத்தைக் கண்டு, நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து-உள்ளம் நடு நடுங்கி மிக்க கண்ணீரைச் சொரிந்து ;

       புலை-புன்மை; கீழ்மையுடைய ஊன் தின்றலுக்காயிற்று. வேள்வி யென்பதும் வேள்விச்சாலைக்கு ஆகுபெயர். பகையை அஞ்சியென இரண்டாவது விரித்தலுமாம். புலம்பி - வருத்தமுற்று. கொடுமரம்- வில் ; அம்பெய்தலை யுணர்த்தி நின்றது.