ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       
40




45
அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம்
கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி
ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய
நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச்சிறு மகனே போக்கப் படுதியென்
றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப


40
உரை
45

       அடர்க்குறு மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்குதலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு அந்தணர் அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில் அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு, ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத் திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு, நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால், புலைச் சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய் என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால் அடித்துக் கேட்க ;
       அடர்க்குறு - பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச் செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின் புலைச்சிறுமகன் என்றார். உரையாய் உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப்படுதல்-தண்டத்தினின்றும் அகற்றப்படுதல். மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை யல்லாய் ; மக்கட்டன்மை யில்லாய் ; 1"மகனல்லை மன்ற வினி" 2"மகனல்லான் பெற்ற மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப் பாடங்கொள்ளலும் ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல.


1  கலி. பாலை, 19: 6. 2 கலி. மருதம், 19: 13.