ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       



60

பொன்னணி நேமி வலங்கொள்சக் கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய
அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ்
ஆமக னாதற் தொத்தனை அறியாய்
நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும்


57
உரை
62

       பொன் அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னாலாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதலவன் மகன் எமக்கு அருளிய- நிலைபெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடைய மகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும் ;

       வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெருமரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார், 'ஆ மகனாதற் கொத்தனை' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள் முன் உரைத்தமை காண்க.