பாத்திர மரபு கூறிய காதை

30




35
தளர்ந்த நடையின் தண்டிகால் ஊன்றி
வளைந்த யாக்கையோர் மறையோ னாகி
மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும்
ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து
உன்பெரும் தானத் துறுபயன் கொள்கென

30
உரை
35

     தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி-நடை தளர்தலால்தான் பிடித்த தண்டையே காலாக ஊன்றிக்கொண்டு கூனிய உடலையுடைய ஒரு மறையவனாகி, மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் - மிகப் பெரிய பூமியில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும், ஆருயிர் முதல்வன் தன் முன் தோன்றி - ஆருயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர்த் தோன்றி, இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து - யான் இந்திரன் ஈண்டு வந்தேன் நின் எண்ணம் யாது, உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க என - நினது பெரிய தானத்தினாலாகிய மிக்க பயனைக் கொள்வாயாக என்றுரைப்ப ;

சிலப்பதிகாரத்துள்ளும் இவ்வாறே 1"தளர்ந்த நடையிற் றண்டு காலூன்றி, வளைந்த யாக்கை மறையோன்." என வந்துளது, 2"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என்ப வாகலின் ஆபுத்திரனை 'ஆருயிர் முதல்வன்' என்றார். எல்லாத் தானத்தினும் அன்னதானம் சிறந்ததாகலின் பெருந்தானம் எனப்பட்டது.


1 சிலப். 15 : 44-5. 2 புறம் : 18.