பாத்திர மரபு கூறிய காதை


50
புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்
கிரப்போர்க் காணா தேமாந் திருப்ப
நிரப்பின் றெய்திய நீணில மடங்கலும்
பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென
ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணோன்
ஓங்குயர் பெருஞ்சிறப் புலகோர்க் களித்தலும்

49
உரை
54

     புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்கு - உயிர்களைக் காப்பாற்றுகின்ற ஆபுத்திரனது பாத்திரத்தின்கட் பெய்யப்பட்ட உணவுபெருகி, இரப்போர்க் காணாது ஏமாந்து இருப்ப - அவ் வுணவினை யிடுதற்கு இரப்போரைக் காணாமல் அவன் ஏக்கற்றிருக்குமாறு, நிரப்பின் றெய்திய நீள் நிலம் அடங்கலும் - பெரிய நிலவுலக முழுதிலும் வறுமையின்றாகும் பொருட்டு, பரப்பு நீராற் பல்வளஞ் சுரக்கென - முகில்கள் கடன் முகந்து சொரியும் மழை நீரால் பல வளங்களும் பெருகுக என்று, ஆங்கவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் - ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தமை காரணமாக ஆயிரங் கண்களையுடைய இந்திரன், ஓங்குயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் - மிக வுயர்ந்த பெருவளங்களை உலகினர்க்கு அளித்தலும் ;

     பொருந்தூண் என்பதும் பாடம். இன்று-இன்மை; இன்று நிரப்புற்ற என்னலுமாம். பரப்பு நீர் என்பதற்குக் கடல் எனவும், அதனை முகந்து பொழியும் நீரெனவும் பொருள் கொள்க. ஆயிரங் கண்ணோன் அவன் பொருட்டால் உலகோர்க்குச் சிறப்பளித்தலு மென்க. ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தனனெனச் சினந்து இந்திரன் அவனது பாத்திரம் பயனின்றாகுமாறு இங்ஙனம் செய்தானென்க.