ஆதிரை பிச்சையிட்ட காதை

60




65




70
மற்றவர் பாடை மயக்கறு மரபிற்
கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்
சுற்று நீங்கித் தொழுதுரை யாடி
ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்
ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீயென அவருடன் போகிக்
கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்
எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப்
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்
பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக்
கோடுயர் மரநிழற் குளிர்ந்த பின்னவன்

60
உரை
71


       மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின்-அந்நாகருடைய மொழியைச் சாதுவன் ஐயமறக் கற்றவனாகலின் அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர் - அவனுடன் கூறுகின்றவர், அருந்திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம் குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன், அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன் போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் - கள்ளைக் காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்றமுடைய தசையும் வெள்ளிய என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி-கரடி தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக் கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி-நாகர் மொழியாற் பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில் வெப்பந் தணிந்தபின்பு ;

       
கற்றனனாதலின் அவர்களுடன் பேச என விரித்துரைக்க. மாக்களாகிய, ஆங்கவர் என்க. அருந்திறல்: ஆகுபெயர். குருமகன்-குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்: ஆகுபெயர். இருக்கை-இருப்பிடம்; கட்டிலுமாம். 1"பன்றி புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து 'ஒன்றிய' என்னும் இலேசால் பிணவு என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி-அவன் அன்புக்குரியனாகி என்றுமாம்.


1 தொல். மரபு. 58.