உலகவறவி புக்க காதை

       


45
அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து
முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு
உண்ணு நாளுன்உறுபசி களைகென
அந்நா ளாங்கவன இட்ட சாபம்
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை


43
உரை
48

       அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்பமடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவதாண்டில் முதிர்கின்ற நாவற்கினியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய் ;

       பன்னீராண்டு தான் பசித்திருக்கச் செய்த தீவினை பற்றி அவ்வகையே துயருழக்குமாறு சாபமிட்டனனென்க. சாபம் கெடுத்தனை யென்றியையும். போலும் : ஒப்பில் போலி. சாப முடிவெல்லையாகிய நாள் இந்நாள் என்றுமாம்.