உலகவறவி புக்க காதை

       
75




80
துக்கந் துடைக்குந் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவி ஒன்றுண் டதனிடை
ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால்
வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென்
றாங்கவள் போகிய பின்னர் ஆயிழை

75
உரை
83

       துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர் - ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு ;        துக்கம் - பிறவித்துன்பம். ஊரூர் ஆங்கண் - பல ஊர்களிலும்,        ஆங்கு, ஆல்: அசைகள். வடு-வகிர். கூந்தல்: விளி.