உதயகுமரன் அம்பலம் புக்க காதை





5
ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின்
தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித்
தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான்
கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும்

1
உரை
6

 

     ஆங்கது கேட்டு ஆங்கு - மணிமேகலை அறத்தோர் கோலம் பூண்டு பிச்சையேற்று னைவருக்கும் உணவளிப்பதைக் கேட்டு அப்பொழுதே, அரும்புண் அகவயின் - அரிய புண்ணின் உள்ளே, தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு - தீயின்கண் பழுக்கக் காய்தலுற்ற செவ்விய கோலானது சென்று சுட்டாற்போல, கொதித்த உள்ளமொடு - கொதிப்புற்ற உள்ளத்துடன், குரம்பு கொண்டு ஏறி - வரம்பு கடந்து எழுந்து, விதுப்புற் நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கி - நடுக்க மெய்திய மனத்தளாய்ச் சுடு மூச்செறிந்து மயங்கி, தீர்ப்பல் இவ் அறமெனச் சித்திராதிபதிதான் கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்-சித்திராதிபதியானவள் மணிமேகலை கொண்ட இவ்வறத்தினை ஒழித்து விடுவேன் என எண்ணி நாடகக் கணிகையர் அனைவர்க்கும் கூறுவாள்;

     தீ துறு - தீயானது பற்றிய, கோல் சுட்டாங்குத் துன்பத்தாற் கொதித்த உள்ள மென்க. குரம்பு - வரம்பு; கொண்டு - தாண்டியென்னும் பொருட்டு; 1"குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்" என்பது காண்க. விதுப்பு-விரைவுமாம். மேல் வருவன சித்திராபதி கூற்று.


1 நாலடி. 153.