உதயகுமரன் அம்பலம் புக்க காதை

15




20

பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினைமொழி காலைத் திருவின் செல்வி
அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலந் தாங்கின மென்பது
யாவரும் நகூஉம் இயல்பின தன்றே

15
உரை
24

     பலர் தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே - பலருடைய கையதாகிய உணவையுண்டு வாழ்தலாகிய உரிமையையுடையேம்; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழினம் போலும் இயல்பினம்-பாணனிறந்தவிடத்து உடனிறக்குந்தன்மையில்லாத யாழைப் போன்ற இயல்புடையோம்: அன்றியும்-அஃதன்றியும், நறுந்தாது உண்டு நயன் இல் காலை-மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து பசையாகிய தேன் இல்லாதபொழுது, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் - வறிதாகிய பூவை விட்டு நீங்கும் வண்டினையும் போல்வேம்; வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்-மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப் போன்றேம் ஆகி ஆடவரை விட்டு நீங்குவேம் ; தாபதக் கோலம் தாங்கினம் என்பது - பிக்குணிக் கோலம் பூண்டேம் என்பது, யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே - யாவரும் நகைக்கும் இயல்பையுடைய தல்லவோ ;

     நாடகக் கணிகையாதலின் பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை - ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற் றுறக்குங்கொண்டி மகளிரை" என இக் காதையிற் பின்பும் கூறப்பட்டுள்ளது; மதுரைக் காஞ்சி யுள்ளும் 1;"இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை - நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை 2;"தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம் - தவக்கோலம்.


1; மதுரைக். 572-4. 2; பெருங்கதை 1, 35: 137-8