உதயகுமரன் அம்பலம் புக்க காதை

55




60


அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப
ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
நாடகம் விரும்ப நன்னலங் கவினிக்
காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய
விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்
பாழ்மம் பறந்தலை அம்பலத் தாயது
வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென

55
உரை
63

     அரிது பெறு சிறப்பில் குருகு கரு வுயிர்ப்ப - அரிதிற் பெற்ற சிறப்பினால் பறவைகள் ஈனும் வண்ணம், ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி - ஒப்பற்றுயர்ந்த அழகிய கரிய காஞ்சி மரம், பாடல் சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய-பாடல் சான்ற சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ந்த, நாடகம் விரும்ப நன்னலம் கவினி - நாடுகளினிடம் விரும்புமாறு அழகிய நலங்கள் நிறைந்து. காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது-விரும்பப்படும் செவ்வியையுடைய நறிய மலர் விரியப் பெற்றது; உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய - அதனை உதயகுமரனாகிய ஒப்பற்ற வண்டு உண்ணும் பொருட்டு, விரைவொடு வந்தேன்-விரைந்து வந்தேன் ; வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்தாயது - அது மிக்க பெருமையையுடைய இம் மூதூரின் கண்ணே பாழிடமாகிய புறங்காட்டைச் சார்ந்த உலக வறவியில் உள்ளது ; வாழ்க நின் கண்ணி வாய்வாள் வேந்து என-கூரிய வாய் பொருந்திய வாளினையுடைய மன்னவ நின் கண்ணி வாழ்வதாக என வுரைப்ப ;

     
உதயகுமரன் அவைக் களத்திருந்தா னாகலின் சித்திராபதி தான் கூறுவதனைக் குறிப்பி னுணர்ந்துகொள்ளுமாறு சிலேடையாற் கூறுவாளாயினள். காஞ்சிமரத்தைப் புனைந்துரைப்பது போன்ற இதன்கண், 'குருகு' என்பது மாதவியையும், 'மணிக் காஞ்சி' என்பது மணிமேகலையையும் குறித்து நின்றன. மாதவிபெற ஓங்கிய மணிமேகலை நாடகம் விரும்பப் பருவ மெய்தினளென்க. குருகு-குருக்கத்தி ; இது மாதவியெனவும் படும். காஞ்சி - மேகலையாதலைத் திவாகரம் முதலியவற்றானறிக, நாடகம் - நாட்டினிடம், நாடகக்கலை. நாடகம் இவளாற் சிறப்பெய்து மாகலின் "நாடகம் விரும்ப" என்றார் ; 1"நாடக மேத்து நாடகக் கணிகை" என வருதல் காண்க. நலம் கவினி - நலம் நிறைந்து என்னும் பொருட்டு. காமர்-விருப்பம். 'உதயகுமரனெனு மொருவண்டு' என்றது முன்னிலைப் புறமொழி. பறந்தலை - புறங்காடு. குருகு கருவுயிர்ப்ப ஓங்கிய காஞ்சி, நலங் கவினிக் கடிமல ரவிழ்ந்தது ; அதனை உதயகுமரனாகிய வண்டு உண்ணும் பொருட்டு வந்தேன் ; அக் காஞ்சி அம்பலத்தாயது என்க. கண்ணி-தலையிற் சூடும் மாலை. நின் கண்ணி வாழ்க வென்றல் மரபு.


1 சிலப். பதி. 15.