உதயகுமரன் அம்பலம் புக்க காதை


120




125
இடங்கழி காமமொ டடங்கா னாகி
உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென்
நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நோசிதவந் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத்
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பெனச் சென்று
நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப

119
உரை
127

     இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி - உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என - இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள் முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய், நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப - நங்காய் நீ நற்றவம் செய்ய மேற்கொண்டது என்ன காரணம் அதனைக் கூறுவாயாக என்று துணிந்த கேட்க;

     
இடங்கழி - வரம்பு கடந்த; 1"இடங்கழி நெஞ்சத் திளமையானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல் இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய தவமென்றும் ஆம் 2: "நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'' என்றார் இளங்கோடிகளும். உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, யானே கேட்டல் இயல்பெனச் சென்று, 'புரிந்தது என்கொல் சொல் லாய்' என்று கேட்ப என்க.


1 சிலப். 23 : 37.  2 சிலப். 10 : 223.