உதயகுமரன் அம்பலம் புக்க காதை





155
அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த
காயசண் டிகைதன் கையிற் காட்டி
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங்கிம மண்ணீட் டியாரென உணர்கேன்
ஆங்கவள் இவளென் றருளா யாயிடின்
பன்னா ளாயிரனும் பாடு கிடப்பேன்

151
உரை
158

     அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக்கொண்ட நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண் உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த திருவோட்டைப் பெரும்பசியால்வருந்திய காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மாயையின் ஒளித்த மணிமேகலைதனை-மாயையினால் மறைந்த மணிமேகலையை, ஈங்கிம மண்ணீட்டு யார் என உணர்கேன் - ஈண்டுள்ள இப் பாவைகளுள் யார்என்று அறிவேன், ஆங்கவள் இவள் என்று அருளாய் ஆயிடின் - அம் மணிமேகலை இன்னளென அறிவித்தருளாய் ஆயின், பல்நாள் ஆயினும் பாடுகிடப்பேன் - பலநாட்களாயினும் ஈண்டு வரங்கிடப்பேன் ;

மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை. "நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்" (6: 47) என இந்நூலுள் முன்னரும், 1"கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. ஆங்கவள் : ஒரு சொல் ; 2;"தெள்வன் புனற் சென்னி" என்னுஞ் செய்யுளுரையில், "இங்கிவை உங்குவை யென்பன ஒரு சொல்" எனப் பேராசிரியருரைத்தமை காண்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல் ; கருதியது கைகூடும் வரை எழாது கிடத்தலென்க ; 3;"பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு" என்பது காண்க.


1 சிலப். 5: 30.  2 திருச்சிற். 237.   3 சிலப். 9: 15.