விழாவறை காதை



55
நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

54
உரை
57

       நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் றாக-இமைத்தலில்லாத நெற்றித் திருக் கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில் வாழ்கின்ற சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்களோடு வெவ்வேறாகிய செய்வினைகளை, ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை அறிந்த முறைமையினையுடைய
அறிவுடையோர் செய்ம்மின் ;
  விழிநாட்டம்-இமையா நாட்டம்; 1"நுதல திமையா நாட்டம்"
என்பது அகம். 2" நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்" என்பர், இளங்கோவடிகளும். இனி, இறைவி கண் புதைத்தபொழுது நெற்றியிற் புறப்படவிட்டகண் என்றுமாம். விழி-விழித்த. சதுக்கம் -
நான்கு தெருக் கூடுமிடம்- சிறப்பு - நைமித்திகமும், செய்வினை - நித்தமுமாம்; வெவ்வேறு சிறப்பினுக்கேற்ற செய்வினையுமாம். ஆறு - வேதத்தின் ஆறங்கமுமாம். அறிந்தோர் : முன்னிலை.


1 அகம். கடவுள் வாழ்த்து. 2 சிலப். 14 : 7.