விழாவறை காதை


60 ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்

60
உரை
61

       ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற் பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ்செய்து வாதிக்கும் சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து எறுமின்- வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர் ;
       ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்- கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம் ; 1"பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்" 2"பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர். 3"பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம்.


1 சிலப். 5 : 102. 2 கம்ப. நகர. 62. 3 திருவாசகம், சதகம், 49.