சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச்
செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப்
70 பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும்

67
உரை
70

       கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையை - கோங்கம் பூவினுடன் சேர்ந்திருந்த மாங்கனியின் பக்கத்தில் இருந்த பல பொறிகளையுடைய மயிலை, செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்தி-சிவந்த பொற்றட்டில் இனிய பாலை ஏந்திக் கொண்டு, பைங்கிளி ஊட்டும் ஓர் பாவையாம் என்றும் - பசிய கிளியை உண்பிக்கும் ஒரு அழகிய பெண்ணாகும் என்றும்;

        கோங்கலர்க்குப் பாலையுடைய பொற்றட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமைகள். மாங்கனிக்குக் கிளி வடிவும் வண்ணமும் பற்றி உவமையாகும் ; 1"வண்டளிர் மாஅத்துக், கிளி போல் காய கிளைத்துணர்" என்பதுங் காண்க. மற்றும், மாவடுவிற்குக் கிளி உவமையாதலும், மகடூஉ ஒருத்தி பொன்வள்ளத்திலே பாலையேந்திக் கிளியை உண்பிப்பதுமாகிய கருத்துக்கள் 2"சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சில காட்டி, ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல,...கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின், வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர" என்னுஞ் சான்றோர் செய்யுளில் அமைந்திருத்தல் காண்க.

1 அகம். 37. 2 கலி. மருதம். 7.