சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

100




105

மன்னவன் றானும் மலர்க்கணை மைந்தனும்
இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும்
எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்
வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்
ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணுந் திரிந்து தாழ்ந்துவிளை யாடி

100
உரை
106

       மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் - இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும், எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்கவேண்டுமாயின் நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்குதற்குரிய எந்திரம் அமைந்த கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும் - வந்து விழுகின்ற அருவியும் மலர்க்களாகிய அழகிய பந்தரும், பரப்புநீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க்கேணியும் - நீர்ப்பரப்பினையுடைய வாலியும் மறைந்திருக்கின்ற நீரையுடைய கிணறும், ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் - ஒளிந்து வாழ்கின்ற மறைவிடங்களும் பளிக்கறையாகிய இடமும் ஆகிய, யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- எவ்விடத்தும் திரிந்து தங்கி விளையாடி ;

       இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இரு திங்கள்கள்.
இளங்கால்-இளந் தென்றற்காற்று, மந்தமாருதம். இளவேனிற் காலத்திலே இளந் தென்றல் வீசாநிற்கக் காமவேட்கை விஞ்ச மன்னவன் விளையாடினான் என்பார், 'மன்னவன்றானும் மைந்தனும் வேனிலும் செல்வனும் விளையாடி' என்றார். 1"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும், தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய, வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும், இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த, சித்திரப் பூமி வித்தக நோக்கி" என வருவது ஈண்டு அறியற்பாலது.

1 பெருங். 1, 33: 3-7.