சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை




110




115

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமந் தாழ்ந்த
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
தமனியம் வேயந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்றினி தேறலும்

107
உரை
116

       மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்-மகத நாட்டிற் பிறந்த மணி வேலைக்காரரும் மகாராட்டிரத்திற் பிறந்த பொற்கம்மியரும், அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்-அவந்திநாட்டுக் கொல்லரும் யவனநாட்டுத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி-தண்ணிய தமிழ்நாட்டுத் தோன்றிய தொழில் வல்லாருடன் கூடி, கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை-உள்ளங் கொண்டு நன்கு செய்தமைத்த கண்களைக் கவரும் தொழிற் சிறப்பினையுடைய, பவளத் திரள்கால் பன்மணிப் போதிகை - பவளத்தாற் சமைத்த திரட்சியுடைய தூண்களும் பல்வகை மணிகளாலாகிய போதிகைக் கட்டைகளும், தவள நித்திலத் தாமம் தாழ்ந்த-வெள்ளிய முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட, கோணச் சந்தி மாண்வினை விதானத்து - கோணமாகிய சந்தினையுடைய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த மேற்கட்டியும் அமைந்த, தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்-பொன்னால் வேயப்பெற்ற வகையமைந்த அழகினையுடைய, பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து-பசிய சாணத்தான் மெழுகப்படாத பசும் பொன் மண்டபத்தின்கண், இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் - இந்திரச் செல்வத்தினையுடைய மன்னவன் இனிது சென்று ஏறுதலும் ;

       மராட்டம் : மகாராட்டிரம் என்பதன் மரூஉ. யவனம் என்பது
பரத கண்டத்தின் புறத்ததாகிய ஓர் நாடு. இங்ஙனம் ஒவ்வொரு நாட்டு வினைஞர் ஒவ்வொரு தொழிலிற் சிறந்திருந்தன ரென்பது, 1 "யவனத் தச்சருமவந்திக் கொல்லரும், மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும், பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும், கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும், வந்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ் - தமிழ் நாடு ; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின் அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின் மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி - கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம் ; ஆவின்சாணம். 2"பைஞ்சேறு மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால் மெழுகப் படாதாயிற்று ; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம் ; 3"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய பொன் மண்டபமென்க.

1 பெருங். 1, 58 : 40 - 4. 2 பெரும்பாண், 218. 3 சீவக. 1414.