சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

நகர நம்பியர் வளையோர் தம்முடன்
25 மகர வீனையின் கிளைநரம்பு வடித்த
இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப்
பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின்

24
உரை
28

       முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு முறைமையாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்புகளைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாளவொற்றாகிய வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர் ;

       
வளையோர்-வளையணிந்த மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ் ; நால்வகை யாழுளொன்று ; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு ; உழை சட்சமாகலின், சடசக்கிரமத்தில் அதற்கைந்தாவதாகிய குரல் கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பனகுரல் முதல் ஒன்றற்கொன்று கிளையாகும் ; ஆகலின் இவ்வைத்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு ; "கிளையெனப் படுவ கிளங்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல் ; தெறித்தலுக்காயிற்று. இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம், சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு ; பூவா வஞ்சி முதலியன போல வெளிப்படையென்னும்இலக்கணத்தது. அவன் - உதயகுமரன்.