சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட
30 மறுவில் செய்கை மணிமே கலைதான்
மாதவி மகளாய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிட லீயான்
காய்பசி யாட்டி காயசண் டிகையென
ஊர்முழு தறியும் உருவங் கொண்டே
35 ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி

29
உரை
35

       உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட - உறைவிடமாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான் - குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின் மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன் புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே - ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப் போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும் அருந்துணையாகி ;

       உள்வரி - வேற்றுரு ; பொய்வேடம். விடலீயான் : வினைத்திரி
சொல். கைவிடனென நினைந்து என ஒரு சொல் வருவித்துரைக்க.