உதயகுமரனை வாளால் எறிந்த காதை

மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
15 பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று
பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து
20 பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய
உலக வறவியின் ஊடுசென் றேறலும்

14
உரை
21

       அத் தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலையுடைய அம் மணிமேகலையை, மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன் சினப்பினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும் வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன் கொண்டு என் பொற்றேர் ஏற்றி - பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி விச்சையும் கேட்டு - அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று, மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன் உள்ளத்திற்கொண்டு எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய - பலருடைய பசியையும் நீக்குமாறு மணிமேகலை ஒதுங்கியுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும் - உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும் ;

       
தோடார் குழலி, தோட்டார் குழலி யென விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி யென்றுமாம். பொதியில்- பொது இல் ; பலருக்கும் பொதுவான இடம் ; அம்பலம். பொதுவில் எனற்பாலது பொதியில் என மரூஉவாயிற்று. குழலியைப் பற்றனன் கொண்டு என இயைக்க. பற்றினன் கொண்டு - பற்றிக்கொண்டு.