உதயகுமரனை வாளால் எறிந்த காதை

தற்பா ராட்டுமென் சொன்ற்பயன் கொள்ளாள்
பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும்
மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
75 பவளக் கடிகையிற் றவளவாள் நகையுங்
குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள்
ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை
ஈங்கொழிந் நனளென இகலெரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள்
80 புற்றடங் காவிற் புக்கொளித் தடங்கினன்
காஞ்சன னென்னுங்க கதிர்வாள் விஞ்சையன்

71
உரை
81

       தன் பாராட்டும் என் சொற்பயன் கொள்ளான் - தன்னைப் பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளானாய், பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள், பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன்போல் நோக்குகின்றனள், மதுக்கமழ் அலங்கள் மன்னவன் மகற்கு - தேன் மணக்கும் மாலையினையுடைய அரசன மகனுக்கு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர் போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள் என - இவன் இவட்குக் காதலனனாமையின் இவள் இவ்விடத்திலேயே தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின் உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் - புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன், காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி பொருந்திய வாட்படையின் யுடைய காஞ்சனன் என்னும் விஞ்சையன் ;

       பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ் ; உதடு. இகல் எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில் : இருபெயரொட்டு. விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித் தடங்கினன் என்க.