கந்திற்பாவை வருவதுரைத்த காதை

கடவு ளெழுதிய நெடுநிலைக் கந்தின்
குடவயி னமைந்த நெடுநிலை வாயின்
முதியாள் கோட்டத தக வயிற் கிடந்த
மதுமலர்க் குழலி மயங்கின ளெழுந்து

1
உரை
4

       கடவுள் எழிதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத்தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக்கண் அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ;

       இரட்டுற மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவையென்றுங் கொள்க ; கடவுள் - தெய்வத் தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த என்பது பாடமாயின் பொருந்திய என்க.