கந்திற்பாவை வருவதுரைத்த காதை



105

இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார்
அறனோ டென்னையென றறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்
கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை

103
உரை
108

        இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-கடவுளும் இல்லை இறந்தோர் மீண்டும் பிறவார் அறத்தால் வரும்பயன் யாது என மொழிந்தோனை, பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-மறுபிறப்பு உண்டென்பதனையும் அறநெறியையும் தவப்பேற்றான் அறிந்த, நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி - நறும்பூங்கோதையகிய நீ இகழ்ந்து சிரிப்பாய், எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை - அப்பொழுது அவன் என் இம்மொழிகளைக் கேட்டு இகழ்ந்தனை போலும் ஆயின் சிறந்த பொருளைக் கூறுவாய் என்று அவன் கேட்ப நின் பிறப்பை அவனுக்கு அறிவுறுத்துவை ;

        அறைந்தோன் - பூதவாதி ; உலோகாயதனுக்கும் பொருந்தும்.
அறவி-அறநெறி ; அறத்தின் பயனுமாம். பெற்றியின் - முறைமையால் என்றுமாம்.