கந்திற்பாவை வருவதுரைத்த காதை

115

வழுவறு மரணும் மண்ணுங் கல்லும்
எழுதிய பாவையும் பேசா வென்ப
தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியா யாயின் ஆங்காது கேளாய்

115
உரை
118

       வழுவறு மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும், எழுதிய பாவையும் - எழுதப்பட்ட பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை, அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும் செய்தியோ அன்றி அறியாயோ, அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக் கூறுவேன் கேட்பாயாக ;

       வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை. கந்திடத்துள்ள பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங் கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க.