கந்திற்பாவை வருவதுரைத்த காதை


120




125

முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்
முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக்
காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி
யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து
மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும்
கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க
ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா
ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும்

119
உரை
128

       முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்-முடியவளர்ந்த சிறப்பினையுடைய பழைய நகரெங்கும், கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும்-கொடி யணிந்த தேரோடும் வீதிகளிலும் கடவுளர் கோயில்களிலும், முதுமர இடங்களும் முதுநீர்த்துறைகளும் - பழைய மரங்கள் நிற்கின்ற இடங்களிலும் பழைய நீர்த் துறைகளிலும், பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி - அம்பலங்களிலும் ஊர் நடுவாகிய மரத்தடிகளிலும் பொருந்துமாறு ஆராய்ந்து, காப்புடை மா நகர்க் காவலும் கண்ணி - காவலுள்ள பெரிய நகரத்தின் காவலையும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து - அறிஞர்கள் உறுதியுடையதாக எண்ணி, மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-, கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க - கருதிய தெய்வத்தை நிறுத்துவோர் அமைக்க, ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா - அங்ஙனம் வகுக்கப்பட்ட தெய்வங்கள் அவ்விடத்தை விட்டு நீங்காவாய், ஊன் கணினார்கட்கு உற்றதை உழைக்கும்-ஊன்கணுடைய மானிடர்க்கு நிகழ்ந்தனை உரைக்கும் ;

       முடித்து - முற்றுப்பெற்று; முடியவெனத் திரிக்க; காப்புடை -
மதில் முதலியவற்றின் காவலையுடைய. நகர்க்காவல் - நகரில் வாழ்வாரைப் பாதுகாத்தல். அறிந்தோராகிய காட்டுநர் வலித்து வகுக்கவென்க. காட்டுநர் - நிறுவுவோர் ; பிரதிட்டை செய்வோர். நீங்கா- நீங்காவாய் : வினையெச்சமுற்று. ஊன்கணினார் என்பதனால் ஞானக் கண்ணில்லாதவ ரென்பது அருத்தாபத்தியாற் பெற்றாம். உற்றது என்றதனால் இனம்பற்றி உறுவதுங்கொள்க. மக்கட்கு முன் நிகழ்ந்த வற்றையும் பின் நிகழ்வனவற்றையும் உரைக்கு மென்க. எனவே ஆண்டுறையும் தெய்வம் பேசுதலல்லது மரம் முதலியன பேசா வென்பது கடைப்பிடிக்க வென்றவாறாம்.