கந்திற்பாவை வருவதுரைத்த காதை


130




135




140

என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய்
மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன்
துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின்
மயனெனக் கொப்ப வகுத்த பாவையின்
நீங்கேன் யான்என் நிலையது கேளாய்
மாந்த ரறிவது வானவ ரறியார்
ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன்
ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ
அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம்
உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப்
பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து
நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின்
மணிமே கலையான் வருபொரு ளெல்லாம்
துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத்

129
உரை
142

       என் திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் - இளங்கொடிபோல்வாய் அங்ஙனமாய எனது வரலாற்றைக் கேட்பாயாக, மன்பெருந் தெய்வகணங்களின் உள்ளேன் துவதிகன் என்பேன் -
மிகப்பெரிய தெய்வகணங்களில் உள்ளேனாகிய யான் துவதிகன் என்னும் பெயருடையேன், தொன்றுமுதிர் கந்தில் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் - பழைமை முதிர்ந்த தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த பாவையைவிட்டு யான் ஒரு பொழுதும் நீங்கேன், என் நிலையது கேளாய் - எனது நிலைமையைக் கேட்பாயாக, மாந்தர் அறிவது வானவர் அறியார் -மக்களறியு மத்தனை விண்ணவரும் அறியமாட்டார், ஓவியச் சேனன் என் உறுதுணைத் தோழன் ஆவதை - சித்திரசேனன் என்பான் எனக்கு மிக்க - துணையாகிய தோழனாவதை, இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ -இந் நகரத்திலுள்ளோருக்கு யார் கூறினரோ, அவனுடன் யான் சென்று ஆடிடம் எல்லாம் - அவனோடு யான் சென்று விளையாடுமிடங்களிலெல்லாம், உடன் உறைந்தார்போல்v ஒழியாது எழுதி - உடன் உறைந்து கண்டவர்போல் விடாமல் எழுதி, பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து - பூவும் நறும் புகையும் பொருந்துமாறு சேர்த்து, நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் - நா மிகவும் வருந்துமாறு என் சிறப்பினைப் பலவாறு பாராட்டுதலினால், மணிமேகலை யான் வருபொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் - மணிமேகலை ! யான் வரும்பொருளனைத்தையும் துணிவுடன் கூறி வந்தேன், என் சொல் தேறு என - என் மொழியைத் தெளிவாயாக என்று உரைப்ப ;

       தானும் சித்திரசேனனும் ஆடிடமெல்லாம் அறிந்தெழுதினமை
கண்ட வியப்பினால், 'மாந்த ரறிவது வானவரறியார்' என்றும், 'ஆருரைத்தனரோ' என்றும், 'உடனுறைந்தோர் போல்' என்றும் தெய்வங் கூறிற்று. வானவரும் என்னும் சிறப்பும்மை தொக்கது. பூவினைத் தூவியும் புகையினை யெடுத்தும் என்க. பொருந்துபு : பொருந்த வெனத் திரிக்க. வருபொருளெல்லாம் - மேல் நிகழுங் காரியமெல்லாம். என் நலம் பாராட்டலின் உரைத்தேன் என்றமையால், மக்கள் கொண்டாடு மளவிற்குத் தெய்வத்தின் அருள் வெளிப்படும் என்பது பெற்றாம்.