கந்திற்பாவை வருவதுரைத்த காதை



175

பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின்
கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்
ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து
பிறர்கறம் அருளும் பெரியோன் றனக்குத்
தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி

172
உரை
179

       அவன் மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் - இயற்றுதற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர், கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும் பிறப்புக்களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண்பிறப்பாகத் தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன் தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்;

'உத்தர மகதத் துறபிறப் பெல்லாம்' என்றமையால் ஆண்டுப்
பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க ; தோன்றிக் களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன் என்றபடி.