கந்திற்பாவை வருவதுரைத்த காதை




30




35

செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்
அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல்
நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம்
மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம்
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்
கண்ட பிறவியே யல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்வேல்
என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும்

27
உரை
35

       செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் - செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடையாய் செல்லாதே செல்லாதே, அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் - அகவிதழ் பொருந்திய மலர்மாலை யினையுடைய மன்னன் மகனிடம் செல்லாதே, நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்-இவ்வுதயகுமரன் நினக்குக் கணவனாக விருந்ததுவும், மனக்கினாயாற்கு நீ மகளாயதூஉம்-மனத்திற்கினிய இவ்விளங்கோவிற்கு நீ மனைவியாக விருந்துவும், பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-முன்னும் பின்னும் பல பிறப்புகளில் உண்டு, கண்ட பிறவியே அல்ல காரிகை-மணிமேகலை நீ அறிந்துகொண்ட முற்பிறப்பில் மட்டுமல்ல, தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்- துன்பத்தில் அழுந்துதற்கேதுவாகிய தடுமாறும் பிறவியாகிய தோற்றத்தை, விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல் - நீக்குமாறு முயல்கின்ற நீ துன்பங் கொள்ளாதே, என்றிவை சொல்லி இருந்தெய்வம் உரைத்துலும்-என்று இவைகளைக் கூறி அப்பெருந் தெய்வம் விளக்குதலும் ;

       செல்லல்: ஏவன்முற்று; அடுக்கு விரைவு பற்றியது. சேயரி
நெடுங்கண்: விளி. மகனா - கணவனாக: 1"நோதக வுண்டோ நும்மகனார்க்கு" என்புழியும் கணவனை மகனார் என்று கூறி யிருத்தல் காண்க கண்ட பிறவியே அல்ல பல் பிறப்புக்களிலும் உளவென்க. கண்ட - அறிந்துகொண்ட. பிறவியே-பிறவியில் மட்டுமே. தடுமாறுதல் நாற்கதியுள் ஒன்றொன்றில் மாறியும், ஆண் பெண் மாறியும் பிறத்தலும், நரகொடு துறக்கம் நானிலத்திற்சென்று சுழலுதலுமாம். சொல்லி உரைத்தலும் - கூறி விளக்குதலுமென்க.

1 சிலப். 16: 17.