கந்திற்பாவை வருவதுரைத்த காதை





40




45

பொன்றிதழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய
தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும்
நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான்
விஞ்சையன் வாளி னிவன்விளிந் ததூஉம்
அறிதலு மறிதியோ அறிந்தனை யாயின்
பெறுவேன் தில்லநின் பேரரு ளீங்கென
ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத்
தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும்

36
உரை
46

       பொன்திகழ் மேனிப் பூங்கோடி பொருந்திய-பொன்போல் விளங்குகின்ற திருமேனியையுடைய மணிமேகலை ஆண்டுத் தங்கி, பொய்யா நாவொடு இப்பொதியிலில் பொருந்திய-இவ்வம்பலத்தின் கண் பொய்யாத நாவுடன் அமர்ந்திருக்கின்ற, தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்-தெய்வமோ நீ நின் திருவடிகளை வணங்கினேன், விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்கிவன் திட்டிவிடம் உணச் செல்லுயிர் போயதும்-முற்பிறப்பில் இவனது உயிரானது திட்டிவிடத்தாலுண்ணப்பட்டு வெவ்வுயிர்ப் பெறிந்து சென்றதும், நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் - இப்பிறப்பில் யான் உளம் நடுங்கிப் பெருந்துயர் கூருமாறு இவன் விஞ்சையனுடைய வாளினாலே இறந்ததும் ஆகிய தீவினைகளை, அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் - அறியலும் செய்தியோ அங்ஙனம் அறிந்திருப்பையானால், பெறுவேன் தில்ல நின் பேரருள் ஈங்கென-நினது போருளை இவ்விடத்துப் பெறுவேன் என்று கூற, ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள் என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று, தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும் ;

       பொருந்தி - செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது
திரியுமியல்புடைய உயிர். போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக் காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ ; இஃது 1"உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்லவென்பதும் பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி. தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத்தலுமாம் ;

1 கலி. 23,