கந்திற்பாவை வருவதுரைத்த காதை


55




60

காலை தோன்ற வேலையின் வரூஉம்
நடைத்திறத் திழுக்கி நல்லடி தளர்ந்து
மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச்
சீல நீங்காச் செய்தவத் தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளுந் தலையுங் துணிந்துவே றாக
வாளிற் றப்பிய வல்வினை யன்றே
விராமலர்க் கூந்தன் மெல்லியல் நின்னோ
டிராகுலன் தன்னை யிட்டக லாதது

54
உரை
62

       காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து - வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை - சோற்றுப் பாத்திரம் அழியுமாறு வீழ்ந்த அடுந் தொழிலோனை, சீலம் நீங்காச் செய்தவத்தோர்க்கு- ஐவகைச் சீலமும் தவறாத பெருந்தவத்தோர்க்கு, வேலை பிழைத்த வெகுளி தோன்ற - காலந்தவறியதனா லுண்டாகிய சினமானது தோன்ற, தோளும் தலையும் துணிந்து வேறாக-தோளும் தலையும் துணிபட்டு வேறாகுமாறு, வாளில் தப்பிய வல்வினை அன்றே -
இராகுலன் வாளால் வெட்டிய தீவினையல்லவோ, விராமலர்க் கூந்தல் மெல்லியால் நின்னோடு - மணம் பொருந்திய மலர்களையணிந்த கூந்தலையுடைய மெல்லியலே நின்னுடன், இராகுலன் தன்னை இட்டு அகலாதது-இராகுலனையும்விட்டு நீங்காததாகியது;

       தோன்று அ வேலை யெனப் பிரித்தலுமாம். வரூஉ-வாரா நின்று
மடையன்- சோறுசமைப்போன். சீலம் - கள், பொய், காமம், கொலை, களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தல் ; இதனை, 1"ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி" 2"கள்ளும் பொய்யும் காமமுங் கொலையும், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" எனபவற்றானறிக ; இவ்வைந்தும் இல்லறத்தார்க் குரியனவென்றும், இவற்றோடு உயர்ந்த ஆதனத்தில் இருத்தல் கிடத்தலின்மை, சாந்து மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, விடியலுக்குமுன் புசியாமை என்னும் ஐந்துஞ் சேரச் சீலம் பத்து வகைப்படுமென்றும், அவை துறவிகட்குரியன வென்றும் புத்தமத நூல் கூறும். ..

1 மணி. 2 ; 68 2 மணி. 24 ; 77-8