சிறைசெய் காதை

       

115




120

அந்த ணாள னொருவன் சென்றீங்
கென்செய் தனையோ விருநிதிச் செல்வ
பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டு மறிதியோ கேட்டனை யாயின்
நீட்டித் திராது நின்னக ரடைகெனத்
தக்கண மதுரை தான்வறி தாக
இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே !


111
உரை
114

       அந்தணாளன் ஒருவன் சென்று - அப்பொழுது மறையவனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ இரு நிதிச் செல்வ, பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர் பலறம் செய்யினும் - மனைவி யில்லதோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும், புத்தேள் உலகம் புகார் என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை, கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும் உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம் கேட்டறிந்தனையானால், நீட்டித்து இராது நின் நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல் நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன் தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை அடைந்தனன்;
  
       நீட்டித் திராது நின்னகர் அடைக என்றது, விரைவில் நின்பதியை அடைந்து மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால் அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது.