சிறைசெய் காதை

       




180

சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள்
காதல னுற்ற கடுந்துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தனள்
மற்றவள் பெற்ற மணிமே கலைதான்
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
செய்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும்
ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள்


177
உரை
183

       சேரிய நெடுங்கண் சித்திராபதி மகள் - சிவந்த அரி படர்ந்த பெரிய கண்களையுடைய சித்திராபதியின் மகள், காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-மாதவி காதலனாகிய கோவலன் இறந்த கொடிய துன்பத்தைப் பொறாதவளாய் அறவோர் சாலையை அடைந்தனள், மற்றவள் பெற்ற மணிமேகலைதான் முற்றாமுலையினள் முதிராக் கிளவியள் - அம்மாதவி பெற்ற மணிமேகலை யென்பவள் முற்றாத கொங்கையும் முதிராத சொல்லும் உடையளாகியும், செய்குவன் தவம் எனச் சிற்றிலும் பேரிலும் ஐயங்கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - தவம் செய்வேன் என்று சிறிய இல்லங்களிலும் பெரிய மனைகளிலும் பிச்சை யேற்று உண்டு உலக வறவியை அடைந்தனள் ;

       மகளாகிய மாதவி பொறாள் அடைந்தனள் எனக் கூட்டுக. முதிராக்கிளவி - இளஞ்சொல்; மழலைமொழி. முலையினளும் கிளவியளு மாகிய மணிமேகலை என்றலுமாம்.