ஆபுத்திரனாடு அடைந்த காதை





5
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோ னென்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்
காவலன் றேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு

1
உரை
6

       மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகை - அரசன் புதல்வனை வஞ்சனையாற் சேர்த்திய சித்திராபதி, தன் சூழ்ச்சியிற் போயவன் - தனது சூழ்ச்சியாற் சென்ற உதயகுமரன், விஞ்சையன் வாளின் விளந்தோன் என்பது - விஞ்சையனது வாளினால் இறந்தான் என்பதனை, நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி - உள்ளம் நடுங்கக் கேட்டு மிகவருந்தி, மாதவி மகள்தனை வான்சிறை நீக்க - மணிமேகலையைச் சிறையினின்றும் நீக்கும் பொருட்டு, காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்து - மன்னவன் தேவியின் அடிகளில் வீழ்ந்து பணிந்து;

       மணிமேகலையின் தாபதக் கோலத்தை அழித்து அவளை உதய குமரன் கைப்பற்றி நுகருமாறு செய்வேன் என வஞ்சினங் கூறி வந்து அவனை அவள்பாற் செலுத்தினவள் ஆகலின், மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த கணிகை எனச் சித்திராபதியைக் கூறினார். தொல்முது : ஒருபொருட் பன்மொழி.