ஆபுத்திரனாடு அடைந்த காதை




10




15
அரவே ரல்கு லருந்தவ மடவார்
உரவோற் களித்த வொருபத் தொருவரும்
ஆயிரங் கண்ணோ னவிநயம் வழூஉக்கொள
மாயிரு ஞாலத்துத் தோன்றிய வைவரும்
ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பி னொருநூற்று நால்வரும்
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் றன்முன்
உருப்பசி முனிந்த வென்குலத் தொருத்தியும்
ஒன்று கடைநின்ற வாறிரு பதின்மரித்
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாண்முதல்
யானுறு துன்ப மியாவரும் பட்டிலர்
மாபெருந் தேவி மாதர் யாரினும்

7
உரை
18

       அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார் - பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினையுடைய மடவார், உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும் - இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள - இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால், மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் - புவியிடைத் தோன்றிய ஐவரும, ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த - இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும் - மிக்க சிறப்பினையுடைய நூற்றுநால்வரும், திருக்கிளர் மணி முடித்தேவர்கோன் தன் முன் - அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்து தோன்றிய ஒருத்தியும், ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் - என்ற நூற்றிருபத்தொருவர், இத் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள் முதல் - பழமையாகிய பெ,ரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி மாதர் யாரினும் - அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ;

       ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினததிலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க. கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய வரலாற்றை எடுத்தியம்பி, 1 'மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்' என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக் காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன். முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள் புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி.
1 சிலப். 21 : 35.