ஆபுத்திரனாடு அடைந்த காதை

60




65
ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது
பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள்
தீவகச் சாந்தி செய்யா நாளுன்
காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம
மணிமே கலைதன் வாய்மொழி யாலது
தணியா திந்திர சாபமுண் டாகலின்

60
உரை
65

       ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே, இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய்மொழியால் அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வதுமணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம், தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது ;

       அப் புதல்வன் - அங்ஙனம் அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை - மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி, அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க