ஆபுத்திரனாடு அடைந்த காதை


பேதைமை யென்ப தியாதென வினவின்
ஓதிய விவற்றை யுணராது மயங்கி
இயற்படு பொருளாற் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்

111
உரை
114

       பேதைமை என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால், ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால் தான் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல் - முயற்கொம்பு உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்;

       இவற்றை-இப் பன்னிரண்டினையும். கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க.