ஆபுத்திரனாடு அடைந்த காதை

115




120
உலக மூன்றினு முயிரா முலகம்
அலகில பல்லுயி ரறுவகைத் தாகும்
மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந்
தொக்க விலகும் பேயு மென்றே
நல்வினை தீவினை யென்றிரு வகையால்
சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி
வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு
மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும்

115
உரை
122

       உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம் அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர் நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்;

       பௌத்தநூல் கூறும் உலகம் முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் 'உலகம் மூன்றினும்' என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத் தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற் கூறின ரென்க. செய்கை யென்பதனை வருவித்து, செய்கை இருவகையால் தோன்றிக் காட்டும் என முடிக்க.