ஆபுத்திரனாடு அடைந்த காதை





145
அரசன் றேவியொ டாயிழை நல்லீர்
புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ
பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்
கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும்
முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து

141
உரை
147

       அரசன் தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவியுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள் - பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்;

       ஆயிழை நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன் றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப் பின் மணிமேகலையை நோக்கிப் பின்னான் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன் என்க.