ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை




40
காயங் கரையெனும் பேரியாற் றடைகரை
மாயமின் மாதவன் றன்னடி பணிந்து
தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப்
பெருமகன் றன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம்
விலங்கு நரகரும் பேய்களு மாக்கும்
கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரு மக்களும் பிரமரு மாகுதிர்
ஆகலி னல்வினை யயரா தோம்புமின


37
உரை
44

       காயங் கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள, மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து, வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன் அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்- விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும். கலங்கு அஞர்த் தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின் - ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின் ;

புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும், மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும் 1 "அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரு நரகரும், தொக்க விலங்கும பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு வகையாற், சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன.


1 மணி. 30: 56-60.