ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை


185




190

கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப
அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து
கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும்
பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப்
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைக்
தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியசக்
கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள்
இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது


184
உரை
191

       கம்பளச்செட்டி கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டியினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற் சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ் செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள் கெனக் கொடுத்தலும்-இவன் அரசன் புதல்வன் இவனைக்கொண்டு செல்க என்று கொடுத்தலும், பெற்ற உவகைநன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே - மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில், இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில் அவ் வங்கங் கவிழ்ந்தது;

       கம்பளச் செட்டி, பெயர்; கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம்.அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான் என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம்.