வஞ்சிமா நகர் புக்க காதை


15




20




25

இதுநீர் முன்செய் வினையின் பயனால்
காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத்
தாய மன்னவர் வசுவுங் குமரனும்
சிங்க புரமுஞ் செழுநீர்க் கபிலையும்
அங்காள் கின்றோ ரடற்செரு வுறுகாள்
மூவிரு காவத முன்னுந ரின்றி
யாவரும் வழங்கா விடத்திற் பொருள்வேட்டுப்
பல்கலன் கொண்டு பலரறி யாமல்
எல்வளை யாளோ டரிபுர மெய்திப்
பண்டக் கலம்பகர் சங்கமன் றன்னைக்
கண்டனர் கூறத் தையனின் கணவன்
பார்த்திபன் றொழில்செயும் பரத னென்னும்
தீத்தொழி லாளன் றெற்றெனப் பற்றி
ஒற்ற னிவனென வுரைத்து மன்னற்குக்
குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன்

14
உரை
28

       இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க நன்னாட்டு - குற்றமற்ற மலர்சோலைகளையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியராகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமையினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்;

       இது நீர்' என்பது முதலியன, மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும். பயனால்: ஆல்: அசை. 'வினையின் பயன்' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின் அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார் என நிரனிறையாகக்கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம். பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென - விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன்.