வஞ்சிமா நகர் புக்க காதை




65
நறைகமழ் கூந்த னங்கை நீயும்
முறைமையி னிந்த மூதூ ரகத்தே
அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு
மெய்வகை யின்னும் நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய்
இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும்


62
உரை
67

       நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங் கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின் இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண் முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு - சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் - அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினைக்கே விளங்கிய பின், பெரியோன் பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக் கடவாயாவாய், இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து உரைத்தலும் - தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்;

       மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. பிடகம் - பௌத்தாகமம்; இது வினயம், சூத்திரம், சாத்திரம் என மூவகைப்படுதலின் திரிபிடகம் எனவும் படும். மூன்றுள் ஒவ்வொன்றும் பல பகுதிகளை யுடையதாம்.