வஞ்சிமா நகர் புக்க காதை



80




85



90
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய
நிலநா டெல்லைதன் மலைநா டென்னக்
கைம்மலைக் களிற்றனந் தம்முண் மயங்கத்
தேரு மாவுஞ் செறிகழன் மறவரும்
கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக்
கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி
வங்க நாவியி னதன்வடக் கிழிந்து
கனக விசயர் முதற்பல வேந்தர்
அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச்
சிமைய மோங்கிய விமைய மால்வரைத்
தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச்
செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்



78
உரை
90

       பூவா வஞ்சியில் - பூவல்லா வஞ்சியாகிய நகரத்தில், பூத்தவஞ்சி போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய-போர் வினையை மேற்கொண்ட சேனைகளை வஞ்சிப்பூவைத் தமது முடியிலே சூட, நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்க-செல்லும் நிலத்தின்கண் உள்ள நாடுகளின் பரப்பு முழுதும் தனது மலைநாடென்று தோற்றும்படி துதிக்கையைப் பொருந்திய மலைகளைப் போன்ற யானைகள் தம்முள் ஒருங்கு சேர்ந்து செல்ல, தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலின் கலிகொள - தேருங் குதிரையும் நெருங்கிய வீரக்கழ லணிந்த வீரரும் முகிலுடன் கூடிய கடல்போல முழங்க, கடைஇ- அவற்றைச் செலுத்தி, கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி- கங்கைப் பெருநதியின் அடைகரையில் தங்கி, வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-வங்கம் என்னும் ஒருவகை மரக்கலத்தின் உதவியால் அந்நதியின் வடகரையில் இறங்கி, கனகவிசயர் முதற் பல வேந்தர் அனைவரை வென்று - கனகன் விசயன் முதல் உத்தரன் விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலராகிய அனைவரையும் வென்று, அவர் அம்பொன் முடிமிசை - அவர்களுடைய அழகிய பொன்முடி யணிந்த தலைமீது, சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - கொடுமுடி உயர்ந்து பெரிய இமய மலையினின்றும் வெட்டி யெடுத்த, தெய்வக் கல்லும்-தெய்வப் படிமம் அமைத்தற்குரிய கல்லையும், தன் திரு முடி மிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் - தனது அழகிய முடியின் மீது தனது வெற்றியின் அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட வாகை மலரையும் வைத்த சேரனும்;

       இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. 'செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும். சேரன் செங்குட்டுவன் வடக்கே போர்மேற் சென்ற வழியிலிருந்த நாடுகளின் பரப்புகள், அவன் சேனையிலிருந்த மலை போன்ற பெரிய யானைகளின் கூட்டம் அங்கங்குந் திரண்டு சென்றபோது அவன்றன் மலைநாடுபோற்றோன் றின வென்க. அடைகரை - வெள்ளத்தால் மணல் அடைந்த கரை. வங்க நாவி: இருபெயரொட்டு. பல வேந்தரென்றது, கனகன் விசயன் என்பாரொடு கூடிச் செங்குட்டுவனை எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய ஆரிய அரசர் பலரை. அனைவரை என்றார், அவரனைவரையும் சேரன் ஒருங்கு வென்றமையின் ; உம்மை விரித்துக் கொள்க. 'அம் பொன் முடிமிசை' என்ற விடத்துப் பொன் ஆகு பெயர். வாகை - வாகைமலர்; போரில் வெற்றி பெற்றோர் அதற்கு அறிகுறியாக அந்நேரத்திற் சூடும் மலர். அரசர் அதனைப் பொன்னாற் செய்து அணிந்து கொள்வ ராதலின், 'செய் பொன் வாகை' எனப்பட்டது. அவரம்பொன் முடிமிசைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்' என்க. சேரன் செங்குட்டு வனது இவ் வெற்றி வரலாற்றைச் சிலப்பதிகாரத்தின் கால்கோட் காதை நீர்ப்படைக் காதைகளால் அறிக.
1 சிலப். 26: 50-1.