சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       
ஆகம வளவை யறிய னூலாற்
போக புவன முண்டெனப் புலங்கொளல்

43
உரை
44

4. ஆகமவளவை

       ஆகமவளவை - உரையளவையாவது, அறிவன் நூலால் - விளங்கிய அறிவினையுடைய பெரியோன் கூறிய நூல் கருவியாக, போகபுவனம் உண்டெனப் புலங்கொளல்-போக நுகர்ச்சிக்கென இந் நிலவுலகத்தின் மேலுங் கீழும் உலகங்கள் உண்டென மேற் கொள்வதாம் எ - று.

       யாவரும் அறிவுடையரே யெனினும், அதனால் விளக்க முற்றோரே அறிவரெனப்படுப வாதலின், அறிவன் என்பதற்கு விளங்கிய அறிவினையுடைய பெரியோன் என்று பொருள் கூறப்பட்டது. அறஞ்செய்தான் துறக்கம் புகும் என்றும்,அல்லது செய்தான் நிரயம் புகும் என்றும் அறிவர் வழங்குதலின், துறக்க நிரயங்களின் உண்மை கொள்ளப்பட்டமை காண்க; "யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்" எனவும், "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 346,168.) எனவும் அறிவர் கூறுமாறு காண்க. இன்பமும் துன்பமுமாகிய இருவகை நுகர்ச்சியும்போகமெனப் படுதலின், இருவகைப் புவனத்தையும், "போகபுவனம்" என்றார். அறிவனை முதல்வனென்றும் ஆத்தனென்றும், ஆகமத்தை,உரையென்றும் சத்தமென்றும் வழங்குப. இக் கூற்று நிகழ்த்துவோன் "வைதிக மார்க்கத்தளவை வாதி" யாதலின், ஆத்தனாவான் தெளிந்த அறிவுடைய பெரியோனென்ற கருத்தால் "அறிவன்" என ஒருமையாற் கூறினான் என வறிக. நையாயிகருள் தொல்லோர் ஆத்தனாவான் இறைவனொருவனே யென்னாதுவிளங்கிய அறிவுடைய எவனும் ஆத்தனாகலாம் என்றும், "முனிவரும்,ஆரியரும் மிலேச்சரும்"(நியா.பாடி.1. 1. 7.) எல்லாருமடங்க "எவனும்" என்றும் கூறுப. பிற்கால நையாயிகரும் வைசேடிகரும் ஆத்தனாவான் இறைவனென்றே கூறுப.