சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       
45 அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை
இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல்

45
உரை
46

5. அருத்தாபத்தியளவை1
       அருத்தாபத்தி - அருத்தாபத்தியளவை யென்பது,ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால் - ஆயர்[குடியிருக்கும் பாடி கங்கையிலிருக்கிறதென்று சொன்னால்,கங்கைக் கரையில் என்றெண்ணல்- கங்கையில் என்றது கங்கையாற்றின் கரையில் என்னும் பொருளதெனக் கோடல் எ - று.

       ஆயர் குடியிருக்கும் இருப்பு ஆயர்பாடி யெனவழங்கும். ஆயர்பாடி கங்கையிருக்குமென்ற வழி, கங்கையின் இடையே குடியிருத்தல் கூடாமையின், அதன் கரைக்கண் ணிருக்குமென எண்ணியறிந்து கோடல் வேண்டியிருப்பதுபற்றி "எண்ணல்" என்றார். அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு, அதனோடியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல்' அருத்தம்-பொருள்; ஆபத்தி-பிறிதொரு பொருள். "அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே" (சிவ. சித்தி. அளவை. உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப்படும்.கங்கேசர் முதலிய ஆசிரியன்மார்,இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவதென்றோதி, "பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்" என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண்டெனத் துணிந்து, "பகலுண்ணா" னெனவே, "இரவிலுண்பான்" எனத் துணிந்து "சாத்தன் இரவில் உண்பன்" எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப,

"யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்:
இவன் பருத்திருக்கின்றான் ;
ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான்,
"யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல்
இவன் பகலில் உண்ணான் : [உண்டல்வேண்டும்; ஆகவே,
இவன் இரவில்உண்போனாவான்."

1 இதனைச்சபரர் முதலியோர் திருஷ்டார்த்தாபத்தி,சுருதார்த்தா பத்தி யென இருவகைப் படுத்துரைப்பர். கௌடிலியர் தந்திரவுத்திகளில் ஒன்றாக்குவர் (அதி. 15: அத். 1).