சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

50
ஐதிக மென்ப துலகுரை யிம்மரத்து
எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல்

49
உரை
50

7. ஐதிகவளவை
      ஐதிகமென்பது - ஐதிகமென்னும் அளவையாவது ; உலகுரை - உலகோராற் கேள்வி வழியாகக் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சொற்பொருளாகும் ; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தெளிதல்-இம்மரத்தில் வந்திருப்பதாகிய ஒரு பேய் உண்டு என்று உலகவர் கூறுவதை யுடன்பட்டொழிவது எ-று.

      ஒருவரும் கண்ணிற் காணாராயினும், பலரும் உண்டென்ப தொன்றே பற்றி யுடன்பட்டொழிவது ஐதிகவளவையாயிற்று. "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பதும் இதனை யுட்கொண்டிருப்பது காண்க. பிறரும், "கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங்குவலயத்தோர், அன்புடனாலிலலகையுண் டென்பர்க ளென்பதுவும், மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும், என்பர் கணாவல ரென்பது மைதிக மென்பர்களே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்ப.நியாயபாடியம், இதனை ஆகமளவைக்கண் ணடக்கி, ஆத்தனொருவனாற் கூறப்பட்ட வழி இதுவும் ஆகமவளவையா (ii. 2 - 2) மென்று கூறுகிறது.