சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன
சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல்

71
உரை
72

       இல்வழக்கென்பது - இல்வழக்கென்று சொல்லப்படுவது, முயற்கோடொப்பன - முயற்கோடு போலவரும் வழக்குக்களை, சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்-ஓசைவடிவிற்றாய சொல்லே பொருளாகக் கருத்திற் கொண்டொழிதல் எ - று.

       முயற்கோடு ஒப்பன என்றது, ஆகாயப்பூ, யாமை மயிர்க்கம்பலம் முதலாயினவற்றை உளப்படுத்தற்கு. இவை பொருளல்லவாயினும், சொன்மாத்திரையால் உண்டெனக் கொண்டொழிதலாற் பயனின்மையின் குற்றமாயின. முயற்கோடு முதலாயின தொடராற்றலாற்பொய்ப் பொருள் குறித்து நிற்பனவாதலின், 'சொல்லின் மாத்திரத்தாற் கருத்திற் றோன்றல்' என்றார். கருத்திற் கொள்ளாவழி ஆண்டுத் தோன்றுதலின்மையின், கோடல், "கருத்திற் றோன்றல்" எனப்பட்டது.